ஸ்டாலினை சீண்டினார் அழகிரி திமுகவில் மீண்டும் ‘லடாய்’ சென்னை, டிச. 28-

ஸ்டாலினை மீண்டும் மு.க.அழகிரி சீண்டியதன் மூலம் திமுகவில் மீண்டும் லடாய் ஆரம்பமாகி உள்ளது.
மு.க. அழகிரி அளித்த பேட்டியில் , ”ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும்வரை திமுக எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறாது. ஸ்டாலினுடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் சரியில்லை. துரோகம் செய்தவர்களுக்கு பதவி கொடுப்பதை நிறுத்தினால் மட்டுமே திமுக முன்னேறும்.
திமுக தலைவர் கருணாநிதியைப் போன்று களப்பணி செய்தால்தான் தேர்தலில் திமுக வெற்றி பெறும். தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லா தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது. இப்போது கருணாநிதி ஓய்வில் இருக்கும் இந்த சூழலில் ஸ்டாலின் தலைமையில் திமுக எதிர்கொண்ட ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் கூட பெற முடியவில்லை.
எந்தக் கட்சியும் தோல்வியை ஒப்புக்கொள்வதில்லை. திமுகவினர் பணத்துக்கு சோரம் போய்விட்டதாக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார். பணத்துக்காக திமுக தொண்டர்கள் விலை போய்விட்டதாக கூறுவது தவறு.
வெற்றிப்பாதையில் செல்ல வேண்டுமென்றால் திமுகவில் மாற்றம் தேவை. பணம் கொடுக்காமல் தேர்தலில் வெற்றி பெற முடியும். அதற்கு களப்பணி செய்ய வேண்டும். தினகரன் இரட்டை இலை, உதயசூரியன் தோற்கும் அளவுக்கு களப்பணி செய்திருக்கிறார். பணம் கொடுத்தால் மட்டுமே வெற்றிபெற முடியாது. பல்வேறு மாநிலங்களில் எதிர்பார்க்காத பலர் ஆட்சி அமைக்கிறார்கள்” என்று அழகிரி கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. கூறும்போது, திமுகவில் இருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டவர் மு.க.அழகிரி. பொறாமையால் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கிறார் மு.க.அழகிரி. திமுக மீது மு.க.அழகிரிக்கு அக்கறையிருந்தால் முன்பே கருத்து கூறியிருக்க வேண்டியதுதானே. மற்ற கட்சியில் இருந்து வந்தவர்களின் உழைப்புக்கு ஏற்ற பொறுப்பு கொடுப்பது வழக்கமானது தான் என கூறினார்.

Leave a comment

Your email address will not be published.


*