வரிசையில் நின்று ஓட்டு போட்டார் பிரதமர் மோடி பேரணியாக சென்றதால் தேர்தல் கமிஷன் நோட்டீஸ்! அகமதாபாத், டிச.15-

தேர்தலன்று பிரதமர் மோடி பேரணியாக சென்ற விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கையை கேட்டு உள்ளது.
பிரதமர் மோடி ஆமதாபாத் ராணிப் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். பிரதமர் மோடி வாக்களித்த பின்னர், வாக்களித்தன் அடையாளமாக கையில் வைக்கப்பட்ட மையை காட்டிய வண்ணம் சாலையில் நடந்து சென்றார். அவரை நோக்கி மக்கள் மோடி, மோடி என கரகோஷம் எழுப்பினர். வழிநெடுங்கிலும் கூட்டமாக மக்கள் நின்று அவரை பார்த்து கையசைத்தனர். பின்னர் காரில் ஏறிய பிரதமர் மோடி வாக்களித்த மை அடையாளத்தை காட்டிய வண்ணம் காரில் பயணம் சென்றார்.
அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரத்தில் மேற்கொள்ளும் தெருவழி பிரசாரம் போன்று பிரதமர் மோடியின் இந்த பேரணி காணப்பட்டது.
ராகுல் காந்தியின் பேட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது தொடர்பாக உடனடி நடவடிக்கையில் இறங்கிய தேர்தல் ஆணையம் இவ்விவகாரத்தில் என்ன செய்கிறது என காங்கிரஸ் உடனடியாக பதில் கேள்வியை எழுப்பியது. இவ்விவகாரத்தில் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சனம் செய்து உள்ளது. டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையம் முன்னதாக குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார்கள்.
இந்நிலையில் பிரதமர் மோடி பேரணியாக சென்ற விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கையை கேட்டு உள்ளது. நாங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அறிக்கை பெற்ற பின்னர் ஆய்வு செய்வோம் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Leave a comment

Your email address will not be published.


*