ரசிகர்களே.. இந்த ஐபிஎல் தொடரில் நீங்களும் “அம்பயர்” ஆகலாம்!

மும்பை: 9வது ஐபிஎல் தொடரில் ரசிகர்களும் கூட “அம்பயர்” போல செயல்படலாம் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். அதாவது 3வது நடுவர் தரும் தீர்ப்பு குறித்து ஸ்டேடியத்தில் உள்ள பார்வையாளர்களும் தங்களது கருத்தைத் தெரிவிக்கலாம். இருப்பினும் 3வது நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்றும் சுக்லா கூறியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி பார்வையாளர்கள் கையில் அவுட், நாட் அவுட் என எழுதப்பட்ட அட்டை தரப்படும். 3வது நடுவரின் தீர்ப்புக்குப் பிறகு இவர்கள் அதைத் தூக்கிக் காட்டி தங்களது கருத்தைத் தெரிவிக்கலாம். ஆனால் அது அமலுக்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சுக்லா கூறுகையில், ரசிகர்கள் தாங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிவிக்க இது பயன்படும். ரசிகர்களின் கருத்தை அறிய இது ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான். மற்றபடி ரசிகர்களின் தீர்ப்பு அமல்படுத்தப்படாது.

3வது நடுவர் தரும் தீர்ப்புதான் இறுதியானது. அவர் சொல்வதுதான் இறுதியானது. இந்தத் திட்டத்தின் மூலம் ரசிகர்கள், போட்டியை இன்னும ஈடுபாட்டுடன் பார்த்து ரசிக்க இது உதவும் என்றார் சுக்லா.

ஏப்ரல் 8ம் தேதி மும்பையில் உள்ள ஒர்லியில் தொடக்க விழா நடைபெறும் என்று கூறிய சுக்லா, நடிகர்கள் ரன்வீர் சிங், காத்ரீனா கைப் உள்ளிட்ட சினிமா நடிகர்களும் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.

கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்கவும், ஒடுக்கவும் மகாராஷ்டிர போலீஸாரின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் சுக்லா. இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சூதாட்ட தடுப்புக் கமிட்டி, ஐசிசியின் ஊழல் ஒழிப்புக் கமிட்டி ஆகியவை இணைந்து செயல்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a comment

Your email address will not be published.


*