முதல்முறையாக சாம்பியன் ஆவது யார்? கோலி – வார்னர் அணிகள் இன்று பலப்பரீட்சை…..

பெங்களூர்:

வீராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றது இல்லை. இதனால் முதல் முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளன.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பெங்களூர் அணியின் பலமே கேப்டன் வீராட்கோலி தான். அவர் இந்தப்போட்டி தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் 15 ஆட்டத்தில் 919 ரன் எடுத்து உள்ளார். இதில் 4 சதமும், 6 அரை சதமும் அடங்கும்.

இந்தப்போட்டியில் 81 ரன் எடுத்து ஆயிரம் ரன்னை குவித்து முத்திரை பதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அவர் மீது இருக்கிறது.

அதோடு டிவில்லியர்சும் அந்த அணிக்கு மிகப்பெரிய சக்தியாக விளங்கி வருகிறார். அவர் ஒரு சதம், 6 அரைசதத்துடன் 682 ரன் குவித்து 3–வது இடத்தில் உள்ளார். இதுதவிர வாட்சன் (168 ரன், 20 விக்கெட்), ராகுல் (386 ரன்), யசுவேந்திர ஷகால் (20 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் ஏற்கனவே 2 முறை விளையாடிய அனுபவம் பெங்களூர் அணிக்கு இருக்கிறது. 2009–ல் டெக்கானிடமும், 2011–ல் சென்னை சூப்பர் கிங்சிடமும் தோற்று இருந்தது. மேலும் சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே.

5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்ற அந்த அணி ஐ.பி.எல். கோப்பைக்காக இன்னும் ஒரு ஆட்டத்தில் வெல்லும் வேட்கையில் உள்ளது.

முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடும் ஐதராபாத் அணி பெங்களூருக்கு எல்லா வகையிலும் சவாலாக விளங்க கூடியது.

2013–ல் அறிமுகம் ஆன ஐதராபாத் தனது தொடக்க ஐ.பி.எல். தொடரிலேயே ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறி 4–வது இடத்தை பிடித்தது. இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருவதால் பெங்களூரை வீழ்த்தி கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

கேப்டன் வார்னர் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 16 ஆட்டத்தில் 779 ரன்கள் குவித்து 2–வது இடத்தில் உள்ளார். இதில் 8 அரை சதம் அடங்கும். அவரது ஆட்டத்தை பொறுத்து தான் அந்த அணியின் நிலை இருக்கிறது.

தவான் (473 ரன்), ஹென்ரிக்ஸ் (178 ரன், 12 விக்கெட்), வில்லியம்சன், யுவராஜ்சிங் (198 ரன்), புவனேஸ்வர்குமார் (23 விக்கெட்), முஸ்டாசுபிகர், ரகுமான் (16 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

இந்த தொடரில் இரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் பெங்களூர் அணி 45 ரன்னில் (பெங்களூர்) வென்று இருந்தது. 2–வது ஆட்டத்தில் ஐதரபாத் அணி 15 ரன்னில் வென்று இருந்தது.

ஓட்டு மொத்த ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் இதுவரை மோதிய ஆட்டத்தில் பெங்களூர் 4–ல், ஐதராபாத் 4–ல் வெற்றி பெற்று உள்ளன. இதனால் இன்றைய இறுதிப்போட்டி பரபரப்பாக இருக்கும்.

Leave a comment

Your email address will not be published.


*