போதைபாக்கு, புகையிலை விற்பனை அமோகம்

கூடலூர், மே. 10

கூடலூர் நகராட்சிப்பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதைபாக்கு, புகையிலை அமோகமாக விற்பனை நடைபெறுகிறது. போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நகராட்சி உணவு பாதகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஒயிட்னர் போதையை போல், போதைப்பாக்கு மற்றும் புகையிலையும் வெளியில் தெரியாத போதை என்பதால், வயதானவர்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்களும் இப்போதைக்கு அடிமையாகி வருகின்றனர். புற்றுநோய்வர புகையிலையும் ஒரு காரணம் என தெரிந்திருந்தும், இதன் விற்பனை கடந்த சில ஆண்டுகளில் பன்மடங்காக அதிகரித்துள்ளது.

“18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பாக்கு மற்றும் புகையிலை விற்பது சட்டப்படி குற்றம். மீறி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என மத்தியஅரசு சட்டம் இயற்றியது. அண்டை மாநிலமான கேரளத்தில், போதைப்பாக்கும், புகையிலையும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்பகுதியில் தாராளமாக விற்பனை செய்கின்றனர்.

கண்துடைப்புக்காக நடத்தும் சோதனையை விடுத்து, நகராட்சி உணவு பாதுகாப்புத்துறையினர் முறையாக சோதனை நடத்த வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி அருகே உள்ள கடைகளை அடிக்கடி சோதனை செய்வதோடு, மாணவர்களுக்கு போதைபாக்கு, புகையிலை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கேரளத்தில் போதைப்பாக்கும், புகையிலையும் தடை செய்யப்பட்டுள்ளதால், கூடலூர், கம்பம் பகுதியில் இருந்து தினந்தோறும், இவை கடத்தி செல்லப்படுகிறது. சிறுசிறு பார்சல்களாக பஸ்களிலும், ஜீப்புகளிலும் கடத்திச்செல்கின்றனர். மேலும் தமிழகப்பகுதியிலிருந்து ஏலத்தோட்ட வேலைக்காக செல்லும் கூலித்தொழிலாளர்கள் சிலர், போதைப்பாக்கு, புகையிலையை வாங்கிச்சென்று, கேரளாவிலுள்ள சிறு கடைகளில் விற்பனை செய்கின்றனர். கம்பம், கூடலூர் பகுதியில் மட்டும் கடைகளில், நாளன்றுக்கு சுமார் 4 லட்சம் ரூபாய் வரை போதைப்பாக்கும், புகையிலையும் விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.


*