பங்குனி உத்திரத்தையொட்டி அழகர்கோவில் கள்ளழகர் திருக்கல்யாண திருவிழா

March 23பங்குனி உத்திரத்தையொட்டி அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா நடைபெற்றது.

மதுரையை அடுத்த அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றானது, பங்குனி மாதம் பவுர்ணமிநாள் உத்திரத்தன்று நடைபெறும் திருக்கல்யாண திருவிழா. அதன்படி இந்த வருடத்திற்கான விழா கடந்த 20-ந்தேதி காலை தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண விழா நேற்று (புதன்கிழமை) அங்குள்ள மண்டப வளாகத்தில் நடந்தது.

முன்னதாக மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் திருக்கல்யாண சீர்வரிசைகள் எடுத்து வரப்பட்டது. பின்னர் சுவாமிக்கு பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு, அங்கு யாகசாலை பூஜை, கோபூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து வேதமந்திரங்கள் ஒலிக்க, பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகிய 4 பிராட்டியார்களை மாங்கல்யங்களை அணிவித்து மணந்தார். இதனையடுத்து தீபாராதனைகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் கொண்ட பிரசாத பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published.


*