நெய்வேலி சிவசுப்பிரமணியசாமி கோவிலில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

March 24 நெய்வேலி நகரில் உள்ள வில்லுடையான்பட்டில் புகழ்பெற்ற சிவசுப்பிரமணியசாமி கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் முருகப்பெருமான் கையில் வில்லுடன் பக்தர்களுக்கு காட்சியளிப்பது தனிச்சிறப்பாகும்.

இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் சிவசுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, ஆட்டுக்கிடா, மயில், ரிஷப வாகனங்களில் உலா வந்தார். கடந்த 21-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் மாலையில் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பங்குனி உத்திரமான நேற்று காலையில் சிவசுப்பிரமணியசாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தன. பின்னர் சிவசுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் ஆடிபாடி சுப்பிரமணியசாமி கோவிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர். இதில் பால், பன்னீர் காவடி எடுத்து கந்தனுக்கு அரோகரா என்கிற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு வந்து பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

நெய்வேலி எட்டு ரோட்டில் உள்ள காவடி செல்வ விநாயகர் கோவிலில் இருந்து 1,008 பக்தர்கள் காவடி எடுத்து காலை 7 மணி அளவில் ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் நகரின் பிரதான சாலை, மத்திய பஸ் நிலையம் வழியாக கோவிலை வந்தடைந்தது.

இதேபோல் 1-வது மற்றும் 27-வது வட்டத்தில் இருந்து வடலூர், வடக்குத்து, வடக்கு மேலூர், வானதிராயபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

என்.எல்.சி. சார்பில் அதன் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். கோவிலில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை, என்.எல்.சி. பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதுதவிர கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை நெய்வேலி குழு கோவில்களின் நிர்வாக அறங்காவலர் பழனி, அறங்காவலர்கள் சுந்தரமூர்த்தி, ஞானசேகரன், மோகன் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

கோவிலில் இன்று (வியாழக்கிழமை) தெப்ப உற்சவம் நடக்கிறது. இதையொட்டி, குளக்கரையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.


*