தொண்டர்களின் கருத்தை ஏற்க வைகோ மறுத்து விட்டார்: குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆவேசம்

நாகர்கோவில், டிச. 14–

குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தில்லை செல்வம் உள்பட 4 ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தி.மு.க.வுக்கு தாவுகிறார்கள்.
சென்னையில் இன்று மாலை அவர்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து கட்சியில் இணைய உள்ளனர். இது பற்றி குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தில்லைசெல்வம் கூறியதாவது:–
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கட்சி தொண்டர்களின் கருத்தை ஒருபோதும் கேட்பதில்லை. அவர் எண்ணியதைத்தான் கட்சிக்குள் திணிக்க முயல்வார்.கடந்த 2011–ம் ஆண்டு தேர்தலை ம.தி.மு.க. புறக்கணித்தது. அதற்கு ஒரு காரணம் இருந்தது. அதன்பிறகு கடந்த 4½ ஆண்டுகளாக அரசியல் களத்தில் ம.தி.மு.க. தொண்டர்கள் பம்பரமாய் சுற்றி களப்பணியாற்றினர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இம்முறை தி.மு.க.வுடன் கூட்டணி சேருவோம் என்று தொண்டர்களுக்கு வைகோ சமிக்ஞை கொடுத்தார். அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். திடீரென அவரை மக்கள் நல கூட்டணி தலைவர்கள் சந்தித்து பேசினர். அதன்பிறகு வைகோ தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.
தி.மு.க.வுக்கு தேர்தல் பணியாற்றி அவர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்த வேண்டுமா? என்று எங்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் மக்கள் நல கூட்டணியில் இணைந்து பணியாற்றுவோம் என்றார்.இதை ம.தி.மு.க.வினரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக வைகோ கூட்டிய கூட்டத்திலேயே பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கட்சி நிர்வாகிகளின் கருத்தை வைகோ கேட்கவில்லை. தனது கருத்தை ஏற்போர் மட்டும் என்னுடன் இருங்கள் என்று பகிரங்கமாக பேசினார். இது நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பொதுச்செயலாளரே எங்களை கட்சியை விட்டு வெளியேற சொன்னபிறகு ம.தி.மு.க.வில் நீடிப்பது சரியாக இருக்காது என்று நான் முடிவு செய்தேன்.
எனது கருத்துக்கு நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள், புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல் ஆகியோரும் உடன்பட்டனர். நாங்கள் தி.மு.க.வில் சேருவது என்று முடிவு செய்தோம். இந்த தகவல் கசிந்ததும் கட்சியின் மேலிடத்தில் இருந்து எங்களை தொடர்பு கொண்டனர். நாங்கள் வெளியேறுவதில் உறுதியாக இருந்தோம். ஆகையால் கட்சி மேலிடம் கூறியதை கண்டு கொள்ளவில்லை.
இன்று நாங்கள் சென்னைக்கு சென்று தி.மு.க.வின் பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறோம். பின்னர் அவருடன் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து தி.மு.க.வில் இணைகிறோம். தி.மு.க.வில் இருந்து பிரிந்து ம.தி.மு.க. உருவான பின்பு இன்று வரை அந்த கட்சிக்கு உண்மையாக இருந்தோம். இப்போது மீண்டும் தாய் கழகத்தில் இணைவதை பெருமையாக கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment

Your email address will not be published.


*