தெறிக்கபோகிறது அக்னி நட்சத்திரம்..

சென்னை மே 03

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. இம்மாதம் 28ம் தேதி வரை மொத்தம் 26 நாட்களுக்கு கத்திரி வெயில் காலம் களை கட்டப்போகிறது. இந்த கால கட்டங்களில் வெப்பத் தாக்குதல் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுவதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குறைந்தபட்சம் 100 டிகிரியில் இருந்து 110 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கும். ஆனால், தமிழகத்தில் கடந்த மாதம் முதலே வெயில் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பல இடங்களில் ஏற்கனவே வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இதனால், பொதுமக்கள் அதிக அவதியடைந்து வருகின்றனர். கடும் வெயிலால் காலை 11 மணிமுதல் மாலை 4 மணிவரை மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் 1 நாளே எஞ்சியுள்ளது. இந்த நேரத்தில் வழக்கத்தை விட வெயில் அதிகமான அளவு பதிவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வேலூரில் நேற்று அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் பதிவானது. நேற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக சேலம் 105.18 டிகிரி, தர்மபுரி 105.12 டிகிரி, திருச்சி 104.1 டிகிரி, மதுரை 104.2 டிகிரி, கோவை 101 டிகிரியும், வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்தே வெப்பம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கடும் கோடை காலம் நாளை தொடங்கி வரும் 28ம் தேதி வரை நீடிக்கிறது.

சூரிய ஒளி கூர்மை அடைந்து வெப்பம் அதிகரிக்கும் அந்த குறிப்பிட்ட காலம் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு கத்தரி என்ற பெயரும் உண்டு. இச்சொல்லின் பொருள் வேனிற் காலத்துக் கடுங்கோடை என்பதாகும். முதல் 7 நாட்கள் வெப்பம் ஏறுமுகமாகவும், நடுவில் உள்ள 7 நாட்கள் வெப்பத் தாக்குதல் கடுமையாகவும், மூன்றாவது 7 நாட்கள் வெப்பம் இறங்குமுகமாகவும் இருக்கும்.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தின் பிற பகுதிகளில் இயல்பைவிட வெப்பம் 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும். இருப்பினும், கடந்த பல நாட்களாக இருந்த அளவுக்கு வெப்பத்தாக்குதல் இருக்காது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று (மே 2) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, வேலூரில் அதிகபட்சமாக 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னை விமான நிலையத்தில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட்டும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 96.98 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெயில் காலங்களில் தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு பழங்களை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தக்காளி, மாதுளை, நெல்லிக்காய் சாறு அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகள் சாலட் எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். நிறைய தண்ணீர், நீர் மோர் பருகினால் வெப்பத்தினால் ஏற்படும், நீர்கடுப்பு பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Leave a comment

Your email address will not be published.


*