திமுகவின் தேர்தல் அறிக்கை தேறாத அறிக்கை நத்தத்தில் திரைப்பட நடிகை விந்தியா பேச்சு-

நத்தம், மே.09,
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பஸ்நிலையம் அருகில் நத்தம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஷாஜகானை ஆதரித்து, திரைப்பட நடிகை விந்தியா பேசியதாவது, எனக்கு முகவரிதந்த முதலமைச்சர் அம்மா தங்கத்தாரகை, காவிரித்தாய் அவர்களை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன். தமிழகத்தில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெறுவது இங்கே கூடியிருக்கும் கூட்டத்தைக் காணும்போது உறுதியாகிறது. தமிழகம் முழுவதும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பக்கம் மக்கள் சக்தி பெருகிவருகிறது. அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பார்த்து திமுகவினர் பயந்து, நடுங்கிப் போயிருக்கிறார்கள். நமது முதலமைச்சர் அவர்களின் தேர்தல் அறிக்கையை பார்த்து மக்களின் மத்தியில் நல்லவரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண உதவிக்கு பெண்களுக்கு 4 கிராம் தங்கமாக இருந்ததை 8 கிராம் தங்கமாகவும், முதியோர் உதவித்தொகை ரூபாய் ஆயிரமாக இருந்ததை ஆயிரத்து ஐநூறாகவும், மின்வசதி 100 யூனிட்வரை இலவசமாகவும், சத்துணவுத்திட்டத்தை விரிபடுத்தியும், விவசாயக்கடன்களை ரத்து செய்வது உட்பட ஏராளமான திட்டங்களை மக்களுக்காக தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

திமுகவின் தேர்தல் அறிக்கை தேறாத அறிக்கையாக போய்விட்டது. திமுகவிற்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது. அதிமுகவின் வெற்றி பிரகாசமாக மக்கள் மத்தியில் வெளிப்பட்டுள்ளது. விஜயகாந்த் கருப்பு எம்ஜிஆர் என்று பிரேமலதா சொல்கிறார். நமது முதலமைச்சர் அவர்கள் நெருப்பு எம்ஜிஆர், மக்களை காக்கும் எம்ஜிஆர் என்பதை மறக்க வேண்டாம். மக்கள்நலக்கூட்டணி மங்கிப்போன கூட்டணியாக தெரிகிறது. மேலும் பல் இல்லாதவன் பஞ்சு மிட்டாய் சாப்பிட ஆசைப்படலாம். பட்டாணி சாப்பிட ஆசைப்படலாமா—–? இதுதான் மக்கள் நலக்கூட்டணி. வருகிற 16ம் தேதி புரட்சித் தலைவி அம்மா மீண்டும் முதலமைச்சர் ஆகிட நீங்கள் அனைவரும் வேட்பாளர் ஷாஜகானுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் இவ்வாறு அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் நகர செயலாளர் சிவலிங்கம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் உத்தமன், நகர் பேரவை செயலாளர் சேக்தாவுது மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published.


*