டிடிவி தினகரன் அணிக்கு 30 எம்.எல்.ஏக்கள் வருவார்கள்: எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணி நம்பிக்கை!

வேலூர்: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை விரைவில் 30 ஆக உயரும் என்று ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ பாலசுப்பிரமணி தெரிவித்துள்ளார். வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்து வந்த வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்து ஆம்பூர் எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியை மாவட்ட செயலாளராக நேற்று டிடிவி தினகரன்அறிவித்தார். இதையடுத்து புதுச்சேரி விடுதியில் தங்கியுள்ள ஆம்பூர் எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணி கூறுகையில், “வேலூர் மேற்கு மாவட்டத்தில் கட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்காத நிர்வாகிகள் மாற்றப்பட்டு ஒத்துழைப்பு அளிக்கக் கூடிய அடிமட்ட தொண்டர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பதவி ஆசை
வேலூரில் கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களை அ.தி.மு.க.வில் இணைக்க புதிய வியூகம் அமைக்கப்படும். ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். இணைப்பு என்பது பதவிக்கான ஒன்று என்பதை வாக்களித்த தமிழக மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
அவசியம் என்ன?
ஓ.பி.எஸ். அணி இல்லாமலேயே பழனிச்சாமி அரசு சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில் ஓ.பி.எஸ். அணியை இணைக்க வேண்டிய அவசியம் என்ன?ஒரிஜினல் அதிமுக ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்தது ஓ.பி.எஸ். மற்றும் பழனிச்சாமியும் தான். தற்போது பொதுச் செயலாளருக்கு எதிராக இவர்கள் செயல்படுவதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். உண்மையான அ.தி.மு.க.வினர் நாங்கள் தான். சட்டப்பேரவையில் பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் கட்சியின் கட்டளைப்படி நாங்கள் வாக்களிக்கத் தயாராக உள்ளோம்.தானாக வரும் பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்த பல எம்.எல்.ஏ.க்கள் வருத்தத்தில் இருப்பதாக எங்களிடம் கூறி வருகின்றனர். அவர்களை நாங்கள் இழுக்க வேண்டியதில்லை. ஓரிரு நாட்களில் அவர்களாகவே தினகரன் அணிக்கு வந்துவிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.


*