கேரளாவில் மது பார்களை மீண்டும் திறக்க மாட்டோம்: மந்திரி ராமகிருஷ்ணன் பேட்டி

கோழிக்கோடு:

கேரளாவில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. அத்துடன் ஓட்டல்களில் மதுபார்களும் மூடப்பட்டன.

இந்த நிலையில் அங்கு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சியை பிடித்து இருக்கிறது. புதிய அரசு முந்தைய காங்கிரஸ் அரசின் மதுக் கொள்கையே நீடிக்கும் என்று அறிவித்தது.

மேலும் மாநிலத்தின் கலால்துறை மந்திரியாக பொறுப்பேற்ற டி.பி.ராமகிருஷ்ணன் கோழிக்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

முந்தைய காங்கிரஸ் அரசு மாநிலம் முழுவதும் மதுபார்களை மூடியது. அவற்றை மீண்டும் திறக்கும் எண்ணம் இல்லை. மது பார்களில் பீர் மற்றும் ஒயின் ஆகியவைதான் சப்ளை செய்யப்பட்டன. என்றாலும் அவற்றின் விற்பனையும் நிறுத்தப்பட்டது. அந்த முடிவு நீடிக்கும்.

மதுவின் தீமைகள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதேபோல் போதை மருந்து நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment

Your email address will not be published.


*