கும்பகோணத்தில் அட்சய திருதியை முன்னிட்டு ஒரே பந்தலில் 12 பெருமாள் கோயில்களின் கருடசேவை உற்சவம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கும்பகோணம் மே 10,

கும்பகோணத்தில் அட்சய திருதியை முன்னிட்டு ஒரே பந்தலில் 12 பெருமாள் கோயில்களின் சார்பில் கருடசேவை உற்சவம் நடந்தது.
சித்திரை மாத வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3வது நாள் அட்சய திருதியை என்று போற்றப்படுகிறது. அச்சமயம் சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசுவாமி, ராஜகோபால் சுவாமி, ஆதிவராகர், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபி ராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜ பெருமாள், பாட்ராச்சாரியார் தெரு கிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 கோயில்களில் இருந்து உற்சவ பெருமாள் சுவாமிகள் தனித்தனி கருட வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினர்.
சுவாமிகளுக்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் சுவாமியும், பெருமாளை மங்களா சாசனம் செய்து பாசுரங்கள் பாடிய ஆழ்வார்களும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏற்பாடுகளை காசுக்கடை தர்ம வர்த்தகர்கள் சங்கம் சார்பில் செய்திருந்தனர்.
போலீஸ் விரட்டியடிப்பு: 12 கோயில்களில் ஒன்றான சக்கரபாணி கோயிலின் பெருமாள் சுவாமி பந்தலுக்கு வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். பந்தலுக்குள் நிறுத்த இடம் இல்லையென கூறினர். இதையொட்டி சாரங்கபாணி கோயில் வாசலில் கருட சேவை நடந்தது.
இதுகுறித்து அர்ச்சகர்கள் கூறுகையில், பன்னெடுங்காலமாக பிரத்யேக பந்தலில் 12 கோயில் பெருமாள்களும் இருப்பது வழக்கம். பல ஆண்டுகள் 15 பெருமாள் வரை இருந்துள்ளனர். ஆனால் போலீசார் வலுக்கட்டாயமாக சக்கரபாணி சுவாமியை வெளியேற்றியது பக்தர்களை புண்படுத்தும் செயலாக உள்ளது. மரபை மீறும் செயலை காவல்துறை கைவிட வேண்டும் என்றனர்.

Leave a comment

Your email address will not be published.


*