குமரியில் விடிய விடிய கனமழை: பேச்சிப்பாறை அணையில் இருந்து 2000 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்

நாகர்கோவில், டிச. 8–

குமரி மாவட்டத்தில் நேற்று விடிய விடிய கனமழை கொட்டியது. கொட்டாரம், மயிலாடி பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடைவிடாது கொட்டிய கனமழையினால் அந்த பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
சுருளோடு, ஆரல்வாய் மொழி, இரணியல், ஆணைக்கிடங்கு, குளச்சல், அடையா மடை, முள்ளங்கினாவிளை, திருவட்டார், குலசேகரம், அருமனை, மார்த்தாண்டம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. கொட்டாரத்தில் அதிகபட்சமாக 43.6 மி.மீ. மழை பதிவானது.மலையோர பகுதியான பாலமோர் மற்றும் அணை பகுதிகளில் கொட்டி வரும் கனமழையினால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
இதையடுத்து அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அணையில் இருந்து 2000 கனஅடி உபரி நீர் இன்று காலை திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 46.32 அடியாக இருந்தது. அணைக்கு 1307 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 75.09 அடியாக இருந்தது. அணைக்கு 394 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 354 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர். அணையில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கோதையாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சிறுவர் பூங்காவை தாண்டி தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.குழித்துறை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் களியல், தேங்காய் பட்டணம் மற்றும் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
இன்று காலையிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கினர். பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டார்.பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது தெரியாமல் சில மாணவ–மாணவிகள் குடை பிடித்தவாறு பள்ளிகளுக்கு வந்திருந்தனர். விடுமுறை என்பதால் அவர்கள் வீடு திரும்பினார்கள்.
அணை நிலவரம் குறித்து பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன் கூறுகையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைகளுக்கு நேற்றை விட இன்று காலை கூடுதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்திற்கேற்ப தண்ணீர் திறந்து விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது பேச்சிப்பாறை அணையில் இருந்து 2000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு தண்ணீர் வரத்து இன்னும் அதிகரித்தால் மதியத்திற்கு பிறகு உபரி நீர் வெளியேற்றப்படும். இதனால் குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றார்.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:–
பேச்சிப்பாறை–6.4, பெருஞ்சாணி–5.6, சிற்றாறு–1–6.8, சிற்றாறு–2– 6.4, மயிலாடி–42.8, கொட்டாரம்–43.6, சுருளோடு–13, கன்னிமார்–15.7, ஆரல்வாய்மொழி–8, பாலமோர்–10.2, இரணியல்–16.4, ஆணைக்கிடங்கு–25, குளச்சல்–28.6, குருந்தன் கோடு–31, அடையாமடை– 5.2, முள்ளங்கினாவிளை– 38, புத்தன் அணை–6, நாகர்கோவில்–28.2, பூதப்பாண்டி–17.1.

Leave a comment

Your email address will not be published.


*