கிரிக்கெட்

அடுத்த 8 ஆண்டுகளில் இந்தியா–பாகிஸ்தான் இடையே 6 கிரிக்கெட் தொடர்கள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுடன் கிரிக்கெட்

மும்பையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2008–ம் ஆண்டு நடத்திய பயங்கர தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு இந்தியா–பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உறவு வெகுவாக பாதிக்கப்பட்டது. அதன் பிறகு பாகிஸ்தானுடன் இந்திய அணி டெஸ்ட் போட்டிகள் எதிலும் விளையாடவில்லை. சில நேரடி போட்டித் தொடர்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது. இருப்பினும் 2012–ம் ஆண்டு இறுதியில் குறுகிய கால பயணமாக பாகிஸ்தான் அணி இந்தியா வந்து 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடியது.

இந்த நிலையில் வருங்கால கிரிக்கெட் சுற்றுப்பயண அட்டவணையின்படி, 2015–ம் ஆண்டில் இருந்து 2013–ம் ஆண்டு வரையிலான அடுத்த 8 ஆண்டுகளுக்கு இந்தியா–பாகிஸ்தான் இடையே முழுமையான 6 போட்டித் தொடர்கள் நடைபெற இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை ஆபரேட்டிங் அலுவலர் சுபான் அகமது அறிவித்துள்ளார். இந்த காலத்தில் இவ்விரு அணிகள் இடையே 14 டெஸ்ட், 30 ஒரு நாள் போட்டி மற்றும் 12 இருபது ஓவர் போட்டிகள் நடைபெறும். இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டிருக்கிறது.

உள்ளூர் போட்டிகள்

இவற்றில் 4 போட்டித் தொடர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்த வேண்டியதாகும். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் சில ஆண்டுகளாக சர்வதேச போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. அவர்கள் தங்களுக்குரிய உள்ளூர் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துகிறார்கள். அந்த வகையில் இந்த ஆட்டங்களும் அங்கு நடத்தப்படும் என்று தெரிகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் திருத்தப்பட்ட சட்ட மசோதாவுக்கு நிபந்தனையின் பேரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆதரவு தெரிவித்தது. இதைத் தொடர்ந்தே பாகிஸ்தானுடன் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published.


*