எங்கெங்கும் காணடா… பணப்பட்டுவாடா… நெருங்கும் க்ளைமாக்ஸ்? அதகளப்படும் ஆர். கே.நகர்!! சென்னை, டிச. 18-

ஆர்.கே.நகர்¢இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார்களால் க்ளைமாக்ஸ் நெருங்கி கொண்டிருக்கிறது. இடைத்தேர்தல் எந்த நேரமும் நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே.நகரில் திரும்பிய பக்கமெல்லாம் பணப்பட்டுவாடா புகார்களால் தொகுதியே அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை ரூ. 100 கோடி பட்டுவாடா என்பது இதுவரை தமிழக வாக்காளர்கள் கேள்விப்படாத தொகையாகும். சின்னஞ்சிறு தொகுதியான ஆர்.கே.நகருக்கே இவ்வளவு பெரிய தொகை வாரியிறைக்கப்பட்டுள்ளதா? என தேர்தல் கமிஷன் அதிகாரிகளே ஆடிப்போயிருக்கிறார்கள்.
ஆர்.கே.நகரில் கட்டுக் கட்டாக பணத்துடன் செல்வி என்ற பெண் சிக்கினார். ரூ. 20 லட்சத்துடன் கைதான டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான செல்வியை விடுவிக்கக் கோரி ஆர்.கே.நகர் மற்றும் கொருக்குப்பேட்டை காவல் நிலையங்களை அவருக்குத் தெரிந்தவர்கள் முற்றுகையிட்டனர். காவல் நிலையத்துக்குள் நுழைந்து செல்வியை மீட்க டி.டி.வி.தினகரனின் ஆதரவு ஆள்கள் முயன்றனர். போதிய போலீஸ் இல்லாததால் தேர்தல் உயரதிகாரி விக்ரம் பத்ரா உத்தரவில் பாதுகாப்புக்கு துணை ராணுவம் அங்கே அனுப்பி வைக்கப்பட்டது. துணை ராணுவத்தினர் யாரையும் காவல்நிலையம் அருகே வரவிடாமல் துப்பாக்கியுடன் சுற்றிலும் நின்று கொண்டனர். “வழக்கமான புகார் மனுக்களுடன் காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களை உள்ளே அனுப்புங்கள்” என்று அங்கிருந்த பத்திரிகையாளர்கள் வேண்டுகோள் வைத்தனர். ஆனால், துணை ராணுவப் படையினர், “ஜாவோ, ஜாவோ ” என்று யாரையும் விடாமல் விரட்டியபடி இருந்தனர். தொடர்ந்து பதற்றமான நிலை தொகுதியில் காணப்படுவதால் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா அந்தந்தக் கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளை வரவழைத்து ஆலோசனை நடத்தினார். “அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனின் மனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் பண விநியோகம் நடப்பதாக” தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவிடம் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் நேரில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.
தொகுதியில் தினகரன் தரப்பினர் மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர். ஒரே நாளில் ஆர்கே நகரில் ரூ.100 கோடி அளவுக்கு பணம் விநியோகம் செய்ததாக தேர்தல் கமிஷனிலும் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பணம் விநியோகம் தொடர்பாக சாலை மறியல் போராட்டமும், மோதல்களும் தொடர் கதையாகி விட்டது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ஆர்கே நகரில் இதுவரை நடந்த சோதனையில் ரூ.30.29 லட்சம்பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தற்போது வரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு புகார்கள் தொடர்பாக 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொகுதியில் அனுமதியின்றி தேர்தல் பணிகளில் ஈடுபட்ட 83 வாகனங்கள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என்று கூறப்பட்டுள்ளது. இக்கட்டான இந்த சூழ்நிலை காரணமாக ஆர்கேநகர் இடைத்தேர்தல் எந்த நேரமும் நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published.


*