உத்தராகண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செல்லாது: சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடை

புதுடெல்லி, ஏப்.23-
உத்தராகண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியதை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணா உள்பட 9 எம்எல்ஏக்கள் செயல்பட்டனர். இதையடுத்து, சட்டசபையில் ஹரீஷ் ராவத் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாகவும், தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் மாநில ஆளுநர் கே.கே.பாலிடம் உரிமை கோரினர். இதனால், சட்டப்பேரவையில் மார்ச் 28ம் தேதி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும்படி ஹரீஷ் ராவத்துக்கு ஆளுநர் கெடு விதித்தார். ஆதரவை பெறுவதற்காக, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் ஹரீஷ் ராவத் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த பேரம் நடைபெற்ற ரகசிய விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, உத்தராகண்டில் ஹரீஷ் ராவத் அரசைக் கலைத்துவிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உத்தராகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் வழங்கினார். இதை எதிர்த்து ஹரீஷ் ராவத், அம்மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த ஐகோர்ட், உத்தராகண்ட் மாநிலத்தில், குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது செல்லாது என்று நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில ஐகோர்ட்டின் முடிவை எதிர்த்து நேற்று சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
வழக்கு விசாரணையை அரசியலமைப்பு பெஞ்ச் விசாரிக்க பரிந்துரைத்து, விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.


*