ஆர்.கே.நகர் தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் மாற்றப்படலாம்…. சொல்வது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்

சென்னை April 09:

சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளரான ஜெயலலிதாவும் கூட திடீரென மாற்றப்படலாம்… என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது, ‘முடங்கிய அரசு, மூழ்கிய தமிழகம்’, ‘சொன்னாங்களே, செஞ்சாங்களா?’, ‘ஐந்தாண்டுகளாய் துருப்பிடித்துக் கிடக்கும் தமிழ்நாடு’ ஆகிய தலைப்புகளில் துண்டுபிரசுரங்களை மக்களிடம் வினியோகம் செய்து திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.

பின்னர் கொளத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தி.மு.க. சார்பில் கடந்த 5 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் துண்டுபிரசுரங்களாக அச்சிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா சட்டசபை தொகுதிகளிலும் வீடுவீடாகச் சென்று விநியோகித்து திண்ணை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த பணி இன்று முதல் தொடங்கப்பட்டு இருக்கிறது.

இதனுடைய தொடக்க நிகழ்ச்சியாக ஆர்.கே.நகர் தொகுதியில் துண்டுபிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைக்கும் வாய்ப்பினை நான் பெற்றிருக்கிறேன். இந்த பணி தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று, தி.மு.க.வின் துணை அமைப்புகளாகப் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மகளிரணி போன்ற பல்வேறு அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் வீடு, வீடாகச் சென்று இப்பணியை மேற்கொண்டு, துண்டுபிரசுரங்களை விந்யோகித்து, இந்த திண்ணை பிரசாரத்தை மேற்கொள்வதற்கு இன்றில் இருந்து திட்டமிட்டு இருக்கிறோம்.

முதலமைச்சர் போட்டியிடக்கூடிய தொகுதி, முதல்வராக இருப்பவரின் தொகுதி என்பது எனக்குப் பிரச்னையல்ல. இதே ஜெயலலிதா மழை வெள்ளம் வந்தபோது இந்த பகுதிக்கு வந்து வேனை விட்டுக்கூட கீழே இறங்காமல், அந்த மழை தண்ணீரில் கால்படாத வகையில், வேனில் இருந்து கொண்டே சுற்றி சுற்றி ஒரு ரவுண்ட் அடித்து விட்டுப்போனார்.

அப்போதும் கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய மக்களுக்கு நிவாரண உதவி செய்ய வேண்டும் என்ற நிலையில் இல்லாமல், ‘வாக்காள பெருமக்களே’, என்றுதான் அவர் பேசினார் என்பதை நாடே அறியும். அதை முதலில் மக்களிடத்தில் உணர்த்துவதற்காகவே தான் இந்த தொகுதியை நான் முதலில் தேர்ந்தெடுத்து, துண்டுபிரசுரம் வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளேன்.

தமிழக மக்கள் நலனை கருத்தில் கொண்டே தே.மு.தி.க.வினர் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளர்கள் தினமும் மாற்றப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், ஆர்.கே.நகர் தொகுதியிலும் அ.தி.மு.க. வேட்பாளர் மாற்றப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a comment

Your email address will not be published.


*